மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

நெல்லிக்காய் தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
தயிர் - 1 பெரிய கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:

நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், தேங்காய்த் துருவல். பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.

பயத்தம் பருப்பு உக்காரை


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவா - 1/2 கப்
வெல்லத்தூள் - 2 கப்
நெய் - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10 முதல் 15 வரை
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் பயத்தம் பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்தப் பருப்பை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத் தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பிலேற்றி அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நெய் விடவும். அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்ன்ர் அதில் அரிசிமாவைப்போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வறுக்கவும். அதில் வெந்தப் பருப்பை நன்றாக மசித்து சேர்க்கவும். அத்துடன் வெல்லப்பாகையும் சேர்த்து கிளறி விடவும். மிதமானத் தீயில் உக்காரை கெட்டியாகும் வரை வைத்திருந்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

நெல்லிக்காய்


அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.

இதில் எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,அதிகளவில் வைட்டமின் 'சி' உள்ளது. ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை போன்ற பழங்களை விடவும் அதிக வைட்டமின் 'சி' கொண்டது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

இரத்தக்குழாயைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும். இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். நெஞ்செரிச்சல், குடற்புண், வயிற்றுப்போக்கு ஆகியவற்றைக் குணப்படுத்தும். இதயநோய் மற்றும் கண்நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். முடி உதிர்வதைத் தடுக்கும்.

கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டுவிடுவார்கள். தண்ணீர் சுவையாக மாறிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நெல்லிக்காயைச் சமைத்தாலும், இதிலுள்ள வைட்டமின் 'சி' யின் அளவு குறைவதில்லை.

மிகவும் துவர்ப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும் நெல்லிக்காயைக் கடித்து சாப்பிடுவதே ஒரு கலை. முகம் சுளிக்க சுளிக்க, பற்களால் கடித்து மென்று கொண்டே இருந்தால், அதன் துவர்ப்பும், புளிப்பும் மாறி, இனிப்புச் சுவை தோன்றும். தின்று முடித்தப்பின், தண்ணீர் குடித்தால், அடடா...... அது ஒரு இனிமையான சுவை. வாழ்க்கையின் தத்துவமும் இதுதானோ??

செய்து பாருங்கள்:

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்
நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்
நெல்லிக்காய் தயிர் பச்சடி

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய்


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை = 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயையும், மஞ்சள் தூள், சிறிது உப்பு ஆகியவற்றையும் போட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

நெல்லிக்காய் துண்டுகளின் மீது, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றைத்தூவி நன்றாக பிசறி விடவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெந்தயத்தைப் போட்டு இலேசாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பிசறி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். ஒரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர், வெந்தயப் பொடியைத்தூவி நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

இது 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்


தேவையானப்பொருட்கள்:

நெல்லிக்காய் - 5 அல்லது 6
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முழு நெல்லிக்காயைப் போட்டு, 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, மூடி வைக்கவும்.

சற்று நேரம் கழித்து, நெல்லிக்காயை நீரிலிருந்து எடுத்து வைக்கவும். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினாலே, நெல்லிக்காய் சிறு துண்டுகளாக வந்து விடும். இல்லையென்றால், கத்தியால் நீள துண்டுகளாக்கி, நடுவிலிருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.

ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்துக் கிளறி விடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தப்பின், அதில் நெல்லிக்காய் துண்டுகளைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, நெல்லிக்காயில் சர்க்கரைப் பாகு நன்றாக ஒட்டும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பாகு சற்று நிறம் மாறி காயுடன் நன்றாகக் கலந்தப் பின் கீழே இறக்கி வைக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.